கரூர் அசம்பாவிதம் குறித்து விஜயிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைப்பேசியில் விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் காரணமாக இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதையடுத்து, அசம்பாவிதம் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அவர் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில், கரூர் துயரச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி தொலைப்பேசி மூலம் விசாரித்தார். இதுகுறித்து சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின்,
“கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றி”
என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், தவெக தலைவரும் நடிகருமான விஜயிடமும் ராகுல் காந்தி தொலைப்பேசியில் உரையடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த அவர், கரூரில் என்ன நடந்தது என்பது பற்றிய முழு விவரத்தைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.