தேர்தல் காலம்: அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முக்கிய தலைவர்கள் 
தமிழ்நாடு

தேர்தல் காலம்: அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முக்கிய தலைவர்கள் | ADMK | DMK |

ஏற்கெனவே திமுகவில் உள்ள அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சேகர் பாபு, ரகுபதி உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்தவர்கள்...

கிழக்கு நியூஸ்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் முதலமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்த ஓ. பன்னீர்செல்வம் இன்று திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ அய்யப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, சமீபத்தில் திமுகவில் இணைந்தவர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம்.

அன்வர் ராஜா

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான அன்வர் ராஜா கடந்த 2025 ஆகஸ்ட் 13 அன்று திமுகவில் இணைந்தார். அதிமுகவின் பிரபலமான இஸ்லாமிய முகங்களில் ஒருவராக அறியப்பட்ட அன்வர் ராஜா, அதிமுகவில் ஒன்றியப் பெருந்தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர், மாநில அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், வக்ஃபு வாரியத்தின் தலைவர் எனப் பல்வேறு அரசுப் பதவிகளை வகித்துள்ளார்.

கார்த்திக் தொண்டைமான்

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், கடந்த 2025 ஆகஸ்ட் 6 அன்று திமுகவில் இணைந்தார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய மன்னர் கார்த்திக் தொண்டைமான். அதிமுகவில் புதுக்கோட்டை நகர்மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ள கார்த்திக் தொண்டைமான், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது ஓபிஎஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். அதன்பின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இருந்தார்.

மைத்ரேயன்

அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் வா.மைத்ரேயன் கடந்த 2025 ஆகஸ்ட் 13 அன்று திமுகவில் இணைந்தார். 1999-ல் ஜெயலலிதா முன்னிலையில் பாஜகவிலிருந்து அதிமுகவில் இணைந்தவர் மைத்ரேயன். 2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். மீண்டும் 2023-ல் பாஜகவில் இணைந்த மைத்ரேயன், அதன்பின் அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

மருது அழகுராஜ்

அதிமுகவில் செய்தித் தொடர்பாளராகவும், நமது அம்மா இதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜா. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையில் தலைமை குறித்த பிரச்னை எழுந்தபோது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து விலகி ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதராவாகச் செயல்பட்டார். இடையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவும் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 2025 செப்டம்பர் 18 அன்று திமுகவில் இணைந்தார்.

மனோஜ் பாண்டியன்

அதிமுக சார்பில் 2001-ல் சேரன்மகாதேவி, 2021-ல் ஆலங்குளம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனோஜ் பாண்டியன். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான இவர், கடந்த 2022-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிய அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் உறுப்பினராக இருந்தார். அதன்பின்னர் கடந்த 2025 நவம்பர் 4 அன்று திமுகவில் இணைந்தார்.

சின்னசாமி

ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சின்னசாமி. 2006 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இணைந்தார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தார். அதன்பின் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சின்னசாமி, டிடிவி தலைமையில் அமமுகவில் இணைந்தார். அதன்பின் அங்கிருந்து விலகி 2024-ல் பாஜகவில் இணைந்தார். அதன்பின் 2025 டிசம்பர் 3 அன்று திமுகவில் இணைந்தார்.

சுப்புரத்தினம் & பாலகங்காதரன்

அதிமுகவில் 1991 - 1996 வரை பழநி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர் சுப்புரத்தினம். அதேபோல் சிவகாசி தொகுதியின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாலகங்காதரன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இருவரும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அவரது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்தனர். அதன் பின்னர் இருவரும் கடந்த ஜனவரி 8 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

வைத்திலிங்கம்

அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராகவும் செயல்பட்டு வந்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்திலிங்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் முக்கிய நபராகவும் செயல்பட்டு வந்த வைத்திலிங்கம் கடந்த ஜனவரி 21 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

மாணிக்க ராஜா

ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார் மாணிக்க ராஜா. அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் தொடர்ந்து மோதல் போக்கில் இருந்த மாணிக்க ராஜா, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அமமுகவில் இணைந்தார். அமமுகவின் தேர்தல் பிரிவு செயலாளராகவும் தென் மண்டல அமைப்பாளராகவும் இருந்தார். அதன்பின் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கடந்த ஜனவரி 23 அன்று திமுகவில் இணைந்தார்.

நிலோபர் கபில்

2016-2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். அதிமுகவில் உட்கட்சிப் பூசல் நிலவிய நிலையில் அதிருப்தியில் இருந்த நிலோபர் கபில், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து கடந்த பிப்ரவரி 14 அன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நடைபெற்ற திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

List of those who were expelled from AIADMK and recently joined DMK