தமிழ்நாடு

அமமுகவினரால் உயிருக்கு ஆபத்து: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ஒரு உதயகுமாரின் உயிர் பறிபோனாலும், ஒரு லட்சம் உதயகுமார்கள் வருவார்கள்.

ராம் அப்பண்ணசாமி

அமமுகவினரால் தங்கள் கட்சியினர் தாக்கப்பட்டதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார் முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார்.

நேற்று (நவ.11) அமமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகளான தினேஷ்குமார், அபினேஷ், விஷ்ணு ஆகியோர் படுகாயமடைந்தனர். இதை அடுத்து இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்த பேட்டி பின்வருமாறு,

`பொது வாழ்க்கையில் ஈடுபவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஆனால் அதை நாங்கள் பொருட்படுத்தாமல் கடமையை ஆற்றி வருகிறோம். ஒரு உதயகுமாரின் உயிர் பறிபோனாலும், ஒரு லட்சம் உதயகுமார்கள் வருவார்கள்.

பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிற நான் உட்பட எங்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். நீங்கள் வன்முறையைக் கையில் எடுத்தாலும், நாங்கள் அதற்கு எதிர்வினையாற்றமாட்டோம். சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இன்று மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்திருக்கிறோம்.

எங்கள் உயிருக்கு வரும் தொடர் அச்சுறுத்தலை முன்னிட்டு உரிய பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் எங்கள் உயிருக்கு அல்லது உடைமைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமானால் நேற்று தாக்குதலில் ஈடுபட்டவர்களில் அதில் சம்மந்தம் உள்ளது. இந்த தாக்குதலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மாணவனுக்கு எங்கள் பொதுச்செயலாளர் ஆறுதல் தெரிவித்தார்.

எங்களிடம் இருந்து பிரிந்து சென்ற அமமுகவினர் எங்களின் வளர்ச்சியையும், கட்சி நிகழ்ச்சிகளையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் கொலை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர்’ என்றார்.