தமிழ்நாடு

அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாகக் கூறினால் சட்ட நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி

சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய 2021-2023 வரை, மத்திய அரசின் சூரிய மின்சக்தி கழகத்துடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

தொழிலதிபர் அதானியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்ததாக பொய்யாக அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக எரிசக்தித்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

அதிக விலைக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வாங்கும் வகையில் பல்வேறு இந்திய மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்துத் தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றி அதானி குழுமம் முதலீடுகளை பெற்றதாகவும், கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டின் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

இதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானிக்கும் இடையிலான ரகசிய சந்திப்பு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார் பாமக தலைவர் ராமதாஸ். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

`திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. பிற மாநிலங்களைப் போல, சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய 2021-2023 வரை, மத்திய அரசின் சூரிய மின்சக்தி கழகத்துடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எந்தத் தனியார் நிறுவனங்களுடனும் மின்சார வாரியம் நேரடியாக ஒப்பந்தம் செய்துகொள்வதில்லை.

அதானி நிறுவனத்துடன் 2014-ல் ஒப்பந்தம் மேற்கொண்ட அதிமுக அரசை விட்டுவிட்டு திமுக அரசை பலரும் விமர்சிக்கின்றனர். அதிமுக ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் யூனிட்டுக்கு ரூ. 7.01 என குறிப்பிடப்பட்டிருந்த சூரிய ஒளி மின் கட்டணத்தை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளது திமுக. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தொழிலதிபர் கௌதம் அதானியை சந்திக்கவில்லை. உண்மையில்லாத பொய்க் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்புகின்றன. அவதூறாக இதுபோன்ற கருத்துகளை பரப்பினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.