கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகல்: ஓபிஎஸ் அணி அறிவிப்பு | O Panneerselvam

"யாரையெல்லாம் வாழ்த்த வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள்."

கிழக்கு நியூஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது, அவரைச் சந்திக்க அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஓ. பன்னீர்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பயணிக்கலாம் எனப் பேச்சுகள் எழத் தொடங்கின. இதனிடையே, கடந்த ஜூலை 29 அன்று சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்குரிய ரூ. 2,151 கோடியை மத்திய அரசு விடுவிக்காததைக் கண்டித்து ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் தான், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் மூன்று மணி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நிறைவடைந்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களை எடுத்துரைத்தார்.

"இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெற்றிருந்தது. ஆனால், இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது என்பது ஒரு தீர்மானம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது.

தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் தலைவர், கழக இணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எந்தக் கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை. எதிர்காலத்தில் நிலைமைகளுக்கு ஏற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் தங்களுடைய நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். "யாரை வீழ்த்த வேண்டும் என்பது எங்களது குறிக்கோள் அல்ல. யாரையெல்லாம் வாழ்த்த வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பதிலளித்தார்.

தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று காலை நேரில் சந்தித்தது பற்றி ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த அவர், "நான் சென்னையில் இருக்கும்போது பிரம்ம ஞானசபையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். நான் நடைப்பயிற்சியில் இருக்கும்போது, அவரும் நடைப்பயிற்சியில் இருந்தார். இருவரும் வணக்கம் சொல்லிவிட்டுச் சென்றோம்" என்று ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

O Panneerselvam | ADMK | OPS | NDA | BJP | PM Modi