சென்னையில் இன்று மட்டும் கனமழைக்கு வாய்ப்பு: பிரதீப் ஜான் கணிப்பு 
தமிழ்நாடு

சென்னையில் இன்று மட்டும் கனமழைக்கு வாய்ப்பு: பிரதீப் ஜான் கணிப்பு | Tamil Nadu Weatherman |

தொடர் மழை காரணமாக இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு....

கிழக்கு நியூஸ்

சென்னையில் இன்று மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் நேற்று (டிச. 2) முதல் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுகுறைந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளது. இது அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர் மழை பெய்துவருவதால் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையை நோக்கி அடர்ந்த மேகக் கூட்டங்கள் திரள்வதால் இன்றும் கனமழை பெய்தால் வியப்பில்லை என்று சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“அடர்ந்த மேகக் கூட்டங்கள் சென்னை நகரத்தை நோக்கித் திரண்டுள்ளன. இன்றும் கனமழை பெய்தால் வியப்பில்லை. இதற்கு ஒரு முடிவே இல்லையா என்றால், ஆம்! இப்போது வலுவிழந்துள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மூலம் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னைக்கு இன்று மட்டும் இரவு வரை கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மற்ற மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம். கோவை, நெல்லை, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“மதியம் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கோவை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intense clouds moving into part of Chennai City. Dont be surprised if we get heavy rains in KTCC (Chennai) today.