சூரியமூர்த்தி 
தமிழ்நாடு

சர்ச்சைக்குரிய காணொளி: விளக்கமளித்த கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி

“அது பொய்யான காணொளி என நீதிமன்றம் 2021-ல் உத்தரவிட்டது”

யோகேஷ் குமார்

எதிர்கட்சியினர் பொய்யான காணொளியை பரப்பி வருவதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் சூரியமூர்த்தி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு (கொமதேக) நாமக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இக்கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் “ஆணவப்படுகொலை செய்வேன்” என ஒருவர் பேசக்கூடிய காணொளி சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. அந்த காணொளியில் பேசியவர் சூரியமூர்த்தி தான் என தகவல் வெளியான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்தார் சூரியமூர்த்தி.

அவர் பேசியதாவது:

“நான் தேர்தலில் போட்டியிடுவதால் என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக எதிர்கட்சியினர் பொய்யான காணொளியை பரப்பி வருகின்றனர். அந்த காணொளி தொடர்பாக 2018-ல் ஈரோடு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அது பொய்யான காணொளி என நீதிமன்றம் 2021-ல் உத்தரவிட்டது. எனவே, இது குறித்து சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இதுபோன்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்காமல், மக்கள் பணியில் ஈடுபடுவேன்” என்றார்.