படம்: https://x.com/kolathur_mani
தமிழ்நாடு

உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புகார்

கிழக்கு நியூஸ்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உச்ச நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தியாவில் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2014-ல் உச்ச நீதிமன்றம் இந்தச் சடங்குக்குத் தடை விதித்தது. தொடர்ந்து, 2015-ல் சென்னையில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் இந்த நடைமுறைக்குத் தடை விதித்தது.

இந்த நிலையில், கரூர் மாவட்டத்திலுள்ள நெரூர் கிராமத்தில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர ஜீவ சமாதி அமைந்துள்ளது. சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்த மே 18-ல், அன்னதானத்துக்குப் பிறகு எச்சில் இலையில் உருண்டு நேர்த்திக்கடன் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்தக் கோயில் வழக்கில்தான் சென்னை உயர் நீதிமன்றம் 2015-ல் தடை விதித்தது.

இந்தத் தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இந்தச் சடங்குக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி உத்தரவிட்டார்.

இவருடைய தீர்ப்பு அதிகளவில் கவனத்தை ஈர்த்தது.

இதைத் தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகாரளித்துள்ளார்.

இதுதொடர்புடைய கடிதத்தில், "நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது தீர்ப்பின் மூலம், எச்சில் இலைகளில் உருளும் நடைமுறையை அவர் மீட்டெடுத்துள்ளார். இது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. நீதிபதியின் நிலைப்பாடானது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானது. இத்தகைய சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என கொளத்தூர் மணி குறிப்பிட்டுள்ளார்.