தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக நிலைநிறுத்துவது நமது குறிக்கோள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று தொடக்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார்.
வரவேற்புரையில் உதயநிதி கூறியதாவது:
"கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைப்பதற்காக வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் கனவு நனவாகியுள்ளது. இதை நடத்த அனைத்து வகையிலும் உதவியாக இருந்த முதல்வருக்கு நன்றி.
2021 முதல் மாநிலம், இந்தியா, சர்வேதசம் என அனைத்து வகையிலான போட்டிகளையும் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். எங்களது திறமைக்கான சான்றாக இது விளங்குகிறது.
இந்தியாவில் கல்வி, மருத்துவம் என்றால் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகக் கூறுவார்கள். விளையாட்டுத் துறையிலும் முக்கியமான மாநிலமாகக் கூறும் வகையில் தமிழ்நாடு இன்று உயர்ந்துள்ளது" என்றார் உதயநிதி ஸ்டாலின்.
இவரைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:
"அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எப்படி நம் இலக்கோ, அதேபோல தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக நிலைநிறுத்துவதும் நமது குறிக்கோள். இந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டுகிறேன். திமுக ஆட்சியில் 44-வது செஸ் ஒலிம்பியாட், ஏடிபி சேலஞ்சர் டூர், சென்னை ஓபன் சேலஞ்சர் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்பு நிகழ்வுகளை நம்முடைய தமிழ்நாட்டில் நடத்தியிருக்கிறோம். அதே நேரத்தில் விளையாட்டு கட்டமைப்புகளையும் உலகத் தரத்திற்கு உயர்த்திக் கொண்டு வருகிறோம்.
மணிப்பூரில் நிலவும் பிரச்னைகளால் அங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள அவர்களை சகோதர உணர்வோடு தமிழ்நாட்டுக்கு வரவேற்று, பயிற்சி கொடுத்தது நமது திராவிட மாடல் அரசு. அவர்களில் சிலர் இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.
கேலோ இந்தியா போட்டி தமிழ்நாட்டில் நடப்பது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இந்த முறை சேர்க்கப்பட்டிருக்கிறது. கேலோ இந்தியா 2023 லோகோவில் வான்புகழ் வள்ளுவர் இடம் பெற்றிருக்கிறார். அதேபோல், வீரமங்கை வேலுநாச்சியார் சின்னமும் அதில் இடம்பெற்றிருப்பது நமக்குக் கூடுதல் பெருமை.
விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாட்டை உலக அளவில் கவனம் ஈர்க்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை வரவேற்று வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.