தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 4 அன்று தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் பிப்ரவரி 10 அன்று நிறைவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் முக்கிய புள்ளி விவரங்களைக் காணலாம்.
பிஹார் சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது அந்த மாநிலத்தில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடங்குவதற்கு முன் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானபோது, 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.43 கோடியாக இருந்தது.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி 27.53 லட்சம் வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டு, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாக உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதில், 2.77 கோடி ஆண் வாக்காளர்கள். 2.89 கோடி பெண் வாக்காளர்கள். 7,617 திருநர் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள்.
18-19 வயதுக்கு உட்பட்டவர்கள் 12.51 லட்சம். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம். 85 வயதைக் கடந்த குடிமக்கள் வாக்காளர்கள் 3.99 லட்சம்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதற்குப் பிறகு 18-19 வயதுக்கு உட்பட்ட 7.04 லட்சம் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை மீண்டும் இணைத்துள்ளனர்.
தொகுதி அடிப்படையில்
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இதில், மொத்தம் 5.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்கடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் 4.28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்கடுத்தப்படியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட எழும்பூர் தொகுதியில் 1.34 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்ட அடிப்படையில்
தமிழ்நாட்டிலேயே திருவள்ளூர் மாவட்டம்தான் 31.57 லட்சம் பேருடன் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக உள்ளது. அதற்கடுத்த இடத்தில் 28.30 லட்சம் வாக்காளர்களைச் சென்னை மாவட்டம் கொண்டுள்ளது.
5.22 லட்சம் பேருடன் குறைவான வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக அரியலூர் உள்ளது. அதற்கடுத்தபடியாக நாகையில் 5.27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
பெண் வாக்காளர்கள்
மாவட்ட வாரியான வாக்காளர் பட்டியலில் பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்ட தொகுதியாக திருவள்ளூர் மாவட்டம் உள்ளது. இதில், 16.12 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
அடுத்தபடியாக சென்னையில் 14.64 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
குறைவான பெண் வாக்காளர்கள் உள்ள மாவட்டமாக அரியலூர் உள்ளது. இதில், 2.63 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக நாகை மாவட்டத்தில் 2.68 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
Key statistics of Final Electoral Roll of Tamil Nadu after the special intensive revision of the voter list, which began on November 4 last year and got completed on February 10 2026