தமிழ்நாடு

கீழடி அகழாய்வு அறிக்கையை மாற்ற முடியாது: அமர்நாத் ராமகிருஷ்ணா | Keezhadi Excavation

"பிழைகள் இருந்தால் திருத்தம் செய்யத் தயாராக இருக்கிறோமே தவிர, அறிக்கையில் மாற்றம் என்பது இயலாத காரியம்."

கிழக்கு நியூஸ்

கீழடி அகழாய்வு பற்றிய அறிக்கையில் பிழைகள் இருந்தால் திருத்தம் செய்யலாமே தவிர, அதை மாற்ற முடியாது என தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015-16-ம் ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 5,200 தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றி பல பொருள்களின் தொன்மை கரிமப் பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

முதலிரண்டு கட்ட அகழாய்வைத் தொடர்ந்து, அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பிறகு, தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த அகழாய்வு குறித்து 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால், மத்திய அரசு சார்பில் இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. அறிக்கையில் திருத்தம் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்தப் பிரச்னை தமிழ்நாட்டில் பெரும் அரசியல் பிரச்னையாக அவ்வப்போது வெடித்து வருகிறது.

இந்நிலையில், அறிக்கையில் திருத்தம் செய்ய முடியாது என அமர்நாத் ராமகிருஷ்ணா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூறியதாவது:

"அகழாய்வில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அறிக்கை தயாரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதே தவிர, இது என் தனிப்பட்ட கருத்து கிடையாது. காரணம், ஒரு குழுவாகத்தான் இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் குழுவின் முடிவு தான் அது. அங்கு கிடைத்த தொல் ஆதாரங்களின் முடிவு தான் அது. வேறு எதுவும் கிடையாது.

102 அகழாய்வுக் குழிகளை அமைத்து அகழாய்வு செய்தோம். 102 அகழாய்வுக் குழிகளில் கிடைத்த தகவல்களை தான் அந்த அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் எவ்வாறு காலக் கணிப்பு செய்தோம் என விளக்கப்பட்டுள்ளது. எவ்வாறு அந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது, எவ்வாறு காலக் கணிப்பு செய்யப்பட்டுள்ளது, என்னென்ன பொருள்கள் கிடைத்தன, என்னென்ன பொருள்கள் எவ்வாறு அந்தக் காலத்தை நமக்கு அங்கீகாரமாக காலக் கணிப்பு செய்வதற்கு உதவுகின்றன என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மாற்றம் செய்வது என்பது இயலாத காரியம். ஒருமுறை அகழாய்வு செய்துவிட்டால், அகழாய்வில் வந்த முடிவுகள் தான் அறிக்கையில் பிரதிபலிக்குமே தவிர, திரும்ப மாற்ற வேண்டும் என்றால் திரும்ப ஓர் அகழாய்வைச் செய்ய வேண்டும்.

என்னுடைய அகழாய்வில் வந்த முடிவை நான் கொடுத்துள்ளேன். அது அறிவியல்பூர்வமாகக் கணிக்கப்பட்டுள்ளது. அங்கு கிடைத்த பொருள்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளன. அதை தான் நாங்கள் முழுமையாகக் கொடுத்துள்ளோம். அதில் மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை. அதில் ப்ரூஃப் ரீடிங் என்று சொல்லப்படுகிற தவறுகள் இருந்தால், அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அதில் பிழைகள் இருந்தால், படங்கள் மாறியிருந்தால், படங்களில் பிழையிருந்தால், எண்களில் பிழை இருந்தால், எண்கள் விட்டுப்போயிருந்தால், அதைச் செய்துகொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதைத் தான் செய்ய முடியும்.

என்னுடைய அறிக்கை முழுமையானது என்று நான் சொல்லவில்லை. அதில் விமர்சனங்கள் வரலாம். காரணம், விமர்சனங்கள் வந்தால் தான் அடுத்தக்கட்ட ஆய்வுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். விமர்சனங்களைத் தவிர்ப்போம் என்று கிடையாது. ஆனால், அதில் மாற்றங்களைச் செய் என்றால் மாற்றங்களைச் செய்ய முடியாது. அது தான் முக்கியம். அகழாய்வு நெறிமுறையை எப்படி மாற்ற முடியும். அகழாய்வு செய்து முடித்து அறிக்கையைக் கொடுத்துவிட்டோம். அதை மாற்று என்றால் மாற்ற முடியாது" என்று அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Keezhadi Excavation | Amarnath Ramakrishna | Keezhadi | Keeladi | Keezhadi Excavation Report | Keeladi Excavation Report