கரூரில் எனக்கு நண்பர்கள் யாரும் கிடையது, என் பெயரில் போலியான கருத்து பரவி வருகிறது என்று நடிகை கயாது லோஹர் தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் காரணமாக இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசலில் தன் நெருங்கிய நண்பரைக் இழந்துவிட்டதாகவும், விஜயின் சுயநல அரசியலுக்குப் பொதுமக்கள் பலியாடுகள் கிடையாது என்று நடிகை கயாது லோஹரின் பெயரில் கருத்து ஒன்று பரவியது.
இந்நிலையில், தன் பெயரில் உலவும் பதிவு போலியானது என கயாது லோஹர் மறுத்துள்ளார். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“எனது பெயரில் பதிவுகளைப் பரப்பும் ட்விட்டர் கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதில் வெளியாகும் அறிக்கைகள் என்னுடையது அல்ல. கரூர் பேரணியில் நடந்த துயர சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கரூரில் எனக்குத் தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என்பதையும், என் பெயரில் பரப்பப்படும் கருத்துகள் தவறானவை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தத் தவறான தகவலை நம்பவோ பரப்பவோ வேண்டாம்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.