ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் அவருடைய சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
5 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு, கவினின் உடலைப் பெற்றுக்கொள்ள அவருடைய பெற்றோர் இன்று காலை சம்மதம் தெரிவித்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் கவின். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கேடிசி நகர் அருகே தனியார் கிளினிக்கில் பணிபுரிந்து வருகிறார் சம்பந்தப்பட்ட இளம்பெண்.
இருவரும் ஒன்றாகப் படித்துள்ளார்கள். 10 வருடங்களாக இருவருக்கும் பழக்கம். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பெண்ணின் இளைய சகோதரர் சுர்ஜித், கவினைத் தனியாக அழைத்துச் சென்று ஆணவப் படுகொலை செய்தார்.
இதுதொடர்பாக சுர்ஜித் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்களாக அவர்களுடைய பெற்றோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சுர்ஜித் கைது செய்யப்பட்டார். இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
எனினும், சுர்ஜித்தின் பெற்றோர்களும் கைது செய்யப்பட வேண்டும் என கவினின் உடலை வாங்க மறுத்து அவருடைய பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். காவல் உதவி ஆய்வாளர்கள் பொறுப்பிலிருந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிறகும், உடலை வாங்க கவினின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை.
புதன்கிழமை இரவு சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டார். எனினும், சுர்ஜித்தின் தாயாரும் கைது செய்யப்பட வேண்டும் என 5 நாள்களாகப் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், திருநெல்வேலி மருத்துவமனையிலிருந்து கவினின் உடலைப் பெற்றுக்கொள்ள வெள்ளிக்கிழமை காலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
இதன்படி, கவினின் உடல் அவருடைய சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது. திமுக எம்.பி. கனிமொழி, திமுக அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கவினின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
Honour Killing | Nellai Honour Killing | Kavin | Tuticorin | Surjith | Tirunelveli