கரூரில் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளார்கள். பிரதமர், முதல்வர் ஆகியோர் இத்துயரச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் கரூரில் இச்சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கரூரில் நடைபெற்ற அரசியல் கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் இறந்துள்ளார்கள். 58 பேர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தச் சம்பவம் நடந்தவுடன் என்னையும் மாவட்ட ஆட்சித் தலைவரையும் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளையும் முதல்வர் தொடர்பு கொண்டார்கள். உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து, உடனடியாக அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவுகளை வழங்கினார்கள்.
பள்ளி கல்வித்துறை அமைச்சரையும் சுகாதாரத்துறை அமைச்சரையும் உடனடியாக நேரில் செல்வதற்கு உத்தரவிட்டு, அவர்கள் இப்பொழுது கரூருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். நாளை காலை, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக முதல்வர் கரூருக்கு வருகிறார்.
மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய அனைத்து மருத்துவர்களும் இப்போது உடனடியாகப் பணிக்கு வரவரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றார்கள். கூடுதலாக நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களிலிருந்து மருத்துவர்களை வரவழைப்பதற்கு உத்தரவிடப்பட்டு, அவர்கள் இன்று இரவே இங்கு வந்து சிகிச்சை அளிப்பதற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா மருத்துவர்களும் இப்போது பணிக்கு வந்துவிட்டார்கள். நாங்களே தனியார் மருத்துவமனைக்குச் சென்று நேரில் பார்த்தோம். எந்தச் சிகிச்சையாக இருந்தாலும் சரி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் எந்தக் கட்டணமும் வாங்காதீர்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளோம்.
முதலில் சிகிச்சை முக்கியம். உயிர் காப்பது முக்கியம். விசாரணை குறித்து பிறகு பேசுவோம் என்றார். என்றார்.