தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல் குமார் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாகப் பதிவிட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டம் மேற்கொண்டார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி செந்தில்குமார் தவெக தலைவர் விஜய் மற்றும் தவெகவைக் கடுமையாகச் சாடினார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
இவற்றுக்கு மத்தியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டன. நீதிபதி என். செந்தில்குமாரின் குடும்பப் பின்னணி குறித்து எழுதப்பட்டன. திருமண நிகழ்ச்சிகளில் எடுத்துக்கொண்ட நீதிபதி என். செந்தில்குமாரின் புகைப்படங்கள் கசியவிடப்பட்டன.
நீதிபதி செந்தில்குமாரும் மற்றொரு வழக்கு விசாரணையின்போது, இதுபற்றி கருத்து தெரிவித்திருந்தார். "நீதிபதிகளின் குடும்பப் பின்னணி மற்றும் கடந்த கால நிகழ்வுகளையெல்லாம் சமூக ஊடகங்களில் தோண்டி எடுக்கிறார்கள். ஆனால், அவர்களின் செயல்களைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றார் நீதிபதி செந்தில்குமார்.
எனினும், கரூர் கூட்டநெரிசல் தொடர்புடைய வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக கண்ணன், டேவிட், சசி என மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தார்கள். இந்நிலையில் தான் தவெகவின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் சாணார்பட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிர்மல்குமார் தனது பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகப் பக்கங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் பற்றி அவதூறு கருத்துகள் தெரிவித்ததாகப் புகார் எழுந்துள்ளது. காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் வழக்கு தொடுக்க, இதன் பெயரில் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Karur Stampede | TVK Vijay | Karur | Madras High Court | Madras High Court Judge | TVK District Secretary | Dindigul South TVK Secretary |