படம்: https://x.com/TVK_Thanjai
தமிழ்நாடு

கரூர் துயரம்: முன்ஜாமின் கோரி என். ஆனந்த், நிர்மல் குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு | Karur Stampede |

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இவர்களுடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கிழக்கு நியூஸ்

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்கள்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செப்டம்பர் 27 அன்று கரூரில் மக்களைச் சந்திக்கும் பிரசாரத்தை மேற்கொண்டார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தார்கள். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, கரூர் வழக்கில் முன்ஜாமின் கோரி என். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்கள். நீதிபதி ஜோதிராமன் வழக்கை விசாரித்தார். சம்பவத்தின் முக்கியத்துவத்தைக் கருதியும் விசாரணை இன்னும் முதற்கட்ட நிலையில் இருப்பதாலும் காயமடைந்தவர்கள் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாலும் என். ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரின் முன்ஜாமின் மனுக்களை நிராகரிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

முன்ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதால், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி என். ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்கள்.

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் என். ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் சார்பில் வாதிடுகையில், விஜயின் பிரசாரக் கூட்டத்தை நடத்த பிற்பகல் 3 முதல் இரவு 10 மணி வரை அனுமதி கோரப்பட்டிருந்தது என்றார்கள். எனவே, அனுமதி கோரப்பட்ட பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த நேரத்திலும் பிரசார நிகழ்ச்சியை நடத்தலாம் என்று என். ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் கூடுதல் பாதுகாப்பை வழங்கவில்லை என்றும் தடியடி நடத்தினார்கள் என்றும் மனுதாரர்கள் இதற்குப் பொறுப்பல்ல என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இவர்கள் வாதிட்டார்கள்.

அரசுத் தரப்பில், " காவல் துறையினர் பாதுகாப்பு வழங்குவது மட்டுமே அரசின் கடமை. கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தரவில்லை" என்று வாதிடப்பட்டது.

N Anand | N. Anand | TVK | Karur | Karur Stampede | Supreme Court | CTR Nirmal Kumar | TVK General Secretary | Madras High Court | Madras High Court Madurai Bench | Madurai Bench | Anticipatory Bail | Bussy Anand |