ANI
தமிழ்நாடு

விஜயின் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு! | TVK Vijay | Karur Stampede |

அண்மையில், ஆயுத பூஜையை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் விஜயின் பிரசார வாகனத்துக்கு மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டிருந்தது.

கிழக்கு நியூஸ்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவரால் கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த நிலையான செயல்முறைகள் வகுக்கப்பட வேண்டும் என உள்துறைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். விசாரணையை உடனடியாகத் தொடங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையின்போது, "மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் காணொளிகளைச் சமர்ப்பித்தார். காட்சி மற்றும் அச்சு ஊடகங்களிலும் அவை பரவலாக வெளியாகின. விஜய் பயணிக்கும் பேருந்து விபத்தில் சிக்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. காணொளியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. வாகனத்தின் ஓட்டுநர் சம்பவத்தைப் பார்த்திருக்கிறார். பார்த்தும் அங்கிருந்து சென்றிருக்கிறார். விபத்தைப் பார்த்த ஓட்டுநர் மற்றும் கட்சித் தலைவர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றிருக்கிறார்கள். கட்சியின் மனநிலையை இந்த நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. புகார் இல்லாதபோதும்கூட அரசு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் விஜயின் பிரசார வாகன ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். முதல் தகவல் அறிக்கையில் விஜயின் பிரசார வாகனம் இணைக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ளதன்மூலம் எந்நேரத்திலும் வாகனம் பறிமுதல் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் ஆயுத பூஜையை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் விஜயின் பிரசார வாகனத்துக்கு மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டிருந்தது.

TVK Vijay | Karur Stampede | FIR | Campaign Vehicle | Vijay Campaign Vehicle |