கோப்புப்படம் 
தமிழ்நாடு

பணமோசடி வழக்கில் சவுக்கு சங்கருக்குப் பிணை: கரூர் நீதிமன்றம்

கிழக்கு நியூஸ்

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சவுக்கு சங்கருக்குக் கரூர் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகங்கள் வாயிலாக அறிமுகமான விக்னேஷ் என்பவரிடம் ரூ. 7 லட்சம் கொடுத்துள்ளார். இணைய வர்த்தகத்தில் முதலீடு செய்தால், லாபம் ஈட்ட முடியும் என்று கூறி விக்னேஷ் இந்தப் பணத்தைப் பெற்றுள்ளார்.

விக்னேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சவுக்கு சங்கரின் யூடியூப் சேனில் பணிபுரிந்தபோது, இந்த ரூ. 7 லட்சத்தை சவுக்கு சங்கரிடம் கொடுத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரைக் கரூர் காவல் துறையினர் 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து, கரூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவரை ஜூலை 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றக் காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சவுக்கு சங்கருக்குப் பிணை வழங்கி கரூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இருந்தபோதிலும், பல்வேறு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், சிறையிலிருந்து வெளியில் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.