திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது.
தங்கக் கொடிமரம் முன் அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டவுடன், 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்தத் தீபம் 4,500 கிலோ நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணியில் ஏற்றப்பட்டது.
இந்த மகா தீபத்தை மோட்ச தீபம் என்றழைக்கப்படுவதுண்டு. பக்தர்கள் இதை 11 நாள்கள் தரிசிக்கலாம்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக மலை உச்சிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், திருவண்ணாமலை கிரிவலத்தில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதியது.
பக்தர்களின் வாத்திய இசை மற்றும் அரோகரா முழக்கங்களுக்கு மத்தியில் தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றப்பட்டதையடுத்து, திருவண்ணாமலை வாணவேடிக்கையுடன் விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.
திருத்தணி முருகன் கோயில், திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டன.