திமுக எம்.பி. கனிமொழி (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

திமுக - காங். கூட்டணி சுமூகமாக இருக்கிறது: கனிமொழி | Kanimozhi | DMK Alliance |

எந்தக் கருத்துக் கணிப்பு வந்தாலும் 2026 தேர்தல் களம் திமுகவுக்கு சாதகமாக இருக்கிறது...

கிழக்கு நியூஸ்

திமுக - காங்கிரஸ் கூட்டணி சுமூகமாகவே இருக்கிறது என்று கூறிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, 2026 தேர்தல் களம் திமுகவுக்குச் சாதகமாகவே உள்ளது என்று பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் கட்டத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அழுத்தம் கொடுக்கும் காங்கிரஸ்

ஏற்கெனவே பாஜக - அதிமுக இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவடைந்து வரும் நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. மறுபுறம் காங்கிரஸில் உள்ள சிலர் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகக் கருத்துகளைக் கூறி வரும் நிலையில், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணியில் இணையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ராகுலைச் சந்தித்த கனிமொழி

இதற்கிடையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தலைமையில் காங்கிரஸார் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, தில்லியில் நேற்று (ஜன. 29) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்.பி கனிமொழி அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது காங்கிரஸின் தொகுதிப் பங்கீடு கோரிக்கை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

கூட்டணி சுமூகமாக உள்ளது

இந்நிலையில், இன்று, 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்துக் கேட்பு கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

திமுக கூட்டணிக்கு நிச்சயமாக புதிய கட்சிகள் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் அது யார் என்பதை முதலமைச்சர்தான் முடிவு செய்வார். எந்தக் கருத்துக் கணிப்பு வந்தாலும் வராவிட்டாலும் 2026 தேர்தல் களம் திமுகவுக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை நான் முடிவு செய்ய வேண்டும் என்பதில்லை. பல ஆண்டுகளாகவே இரண்டு கட்சிகளும் கூட்டணியில்தான் இருக்கின்றன. எங்களுக்குள் எந்த மோதல் போக்கும் கிடையாது. அனைத்தும் சுமூகமாகத்தான் இருக்கிறது” என்றார்.

DMK MP Kanimozhi said that the DMK-Congress alliance is going smoothly and that the 2026 election field is in DMK's favor.