படம்: https://x.com/ANI
தமிழ்நாடு

திருவாரூரில் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து பேனர்கள்!

கிழக்கு நியூஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ள நிலையில், திருவாரூரில் அவருக்கு ஆதரவாகப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதிபர் ஜோ பைடன், அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக கடந்த 22-ல் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக பைடன் குறிப்பிட்டார்.

கமலா ஹாரிஸ் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹாரிஸ். இவருடைய தாத்தா பி.வி. கோபாலன். பிரிட்டிஷ் அரசில் சிவில் சர்வீஸ் அதிகாரியாக இருந்தார்.

அரசுப் பணிக்காக ஷாம்பியா நாட்டுக்குச் சென்ற பி.வி. கோபாலன், பின்னர் அமெரிக்காவுக்குக் குடியேறினார். இவருடைய இரண்டாவது மகளுக்கும், ஜமைக்காவைச் சேர்ந்தவருக்கும் மகளாகப் பிறந்தவர் கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிஸ் 2020-ல் துணை அதிபராகத் தேர்வானபோது, துளசேந்திரபுரத்தில் மக்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தார்கள். தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ள நிலையில், துளசேந்திரபுரம் கிராமம் மீண்டும் உற்சாகமடைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற, கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைத்துள்ளார்கள். இவற்றுக்கிடையே, கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டி, கிராம மக்கள் அங்குள்ள தர்ம சாஸ்தா கோயிலில் கூட்டு வழிபாடு நடத்தியுள்ளார்கள்.