முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் கமல் ஹாசன் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

திமுகவுடன் கூட்டணி ஏன்?: கமல் ஹாசன் விளக்கம் | Kamal Hassan |

தொலைக்காட்சி மீது ரிமோட்டை விட்டெறிந்தது ஏன் என்று கேள்வி கேட்கிறார்கள்...

கிழக்கு நியூஸ்

தொலைக்காட்சி மீது ரிமோட்டை விட்டெறிந்தது ஏன் என்று கேள்வி கேட்கிறார்கள் என்று பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கமல் ஹாசன், திமுகவுடனான கூட்டணி ஏன் என்பது குறித்து விளக்கமளித்தார்.

கடந்த 2018-ல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கிய கமல் ஹாசன், 2021 தேர்தலில் போட்டியிட்டார். அப்போது பிரசாரத்தின்போது திமுகவுக்கு எதிராக தொலைக்காட்சி மீது ரிமோட்டை விட்டெறிந்தார். இந்தக் காணொளி பிரபலமடைந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதன்பின் ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளித்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்ற ஒப்பந்தத்துடன் தேர்தலில் போட்டியிடாமல் அக்கூட்டணிக்கு ஆதரவளித்தார். பின்னர் ஒப்பந்தப்படி கடந்த ஜூலையில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

இதையடுத்து தஞ்சாவூரில் பாடலாசிரியர் சினேகனின் தந்தை அஞ்சலிக் கூட்டத்தில் இன்று பங்கேற்றுப் பேசினார். அப்போது திமுக உடனான கூட்டணி ஏன் என்பது குறித்து கமல் பேசினார். அவர் கூறியதாவது:-

“கட்சிக்கு அப்பாற்பட்டது அன்பு. அதற்கு அப்பாற்பட்டது தொண்டும்தான். அதனால்தான் நான் முதலில் அரசியல் கட்சி ஆரம்பிக்காமல், தொண்டு பழகிக்கொண்டு பிறகு அரசியலில் வந்து மூத்த கட்சிகளிடம் நான் அறிவுரை பெற்றுக்கொண்டு கட்சி தொடங்கியிருக்கிறேன். எதற்கும் மாற்றுக் கருத்து இருந்தாக வேண்டும். இருந்தால்தான் அது ஜனநாயகம். ஆனால், நாடு என்று வரும்பொழுது நாம் கூடி நின்றாக வேண்டும். நீங்கள்தான் தொலைக்காட்சி ரிமோட்டைத் தூக்கி எறிந்தீர்களே, நீங்கள் ஏன் திமுகவில் சேர்ந்தீர்கள் என்று கேட்கிறார்கள். ஆம் நான் ரிமோட்டை தூக்கி எறிந்தேன். ரிமோட்டை வேறு ஒருவர் தூக்கிக் கொண்டு போய்விடக் கூடாது அல்லவா. ரிமோட் மாநிலத்துடன் இருக்க வேண்டும். நாங்கள் கல்வியே அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ரிமோட்டைக் கொடுப்போமா?

நான் தூக்கி எறிந்த ரிமோட்டைக் கொண்டு வாருங்கள். ஒளித்தாவது வைப்போம். ஒருவர் மீது ஒருவர் தாக்கிக் கொள்ள வேண்டாம். ஆனால் யாரோ ஒருவர் வந்து அதை எடுத்துக்கொண்டு போய்விடக் கூடாது. அப்படி எடுத்த முடிவுதான் அது. இந்தக் கூட்டணி புரிந்தால் புரிந்துகொள்ளுங்கள். புரியாவிட்டால் சும்மா இருங்கள்.

ஜனநாயகம் என்று வந்துவிட்டால் இந்தத் தொல்லைகள் எல்லாம் இருந்தே தீரும் என்பதை புரிந்துகொள்க. அது வேண்டாம் என்று நினைத்தால் மாற்று அரசியல் என்பது பாசிசம். அது எங்களுக்கு வேண்டாம்.

அது வேண்டாம்னு நினைச்சா மாற்று அரசியல் என்பது பாசிசம் அது எங்களுக்கு வேண்டாம் இந்த அரசியல் செய்தி போதுமானது மற்றவர்களுக்கு இங்கே நான் சொன்ன அன்பின் செய்தி போதாது போதவே போதாது. அதைத் தொடர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருப்போம். உங்களுக்கான செய்தி சொல்லியாகிவிட்டது” என்றார்.

Kamal Haasan opened up about why MNM joined the alliance with the DMK and also explained the controversy surrounding the 2019 video in which he threw a remote control at a television in protest against the DMK.