கடந்த நான்கு ஆண்டுகளில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசனின் சொத்து மதிப்பு ரூ. 129 கோடி உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூன் 19-ல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், மக்கள் நீதி மய்யத்திற்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. இதன்படி கடந்த ஜூன் 6-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், அவரின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 59.69 கோடி என்றும், அசையா சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 245.86 கோடி என்றும், கடன் மதிப்பு ரூ. 49.67 கோடி என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 305.55 கோடி என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டபோது கமல் ஹாசன் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் கூடிய பிரமாண பத்திரத்தில், அவரது சொத்துகளின் மதிப்பு ரூ. 176 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம், 4 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ. 129 கோடி உயர்ந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் விக்ரம், இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் படங்களில் அவர் நடித்ததன் மூலம் கிடைத்த வருவாயால் இந்த சொத்து மதிப்பு உயர்வு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.