சென்னையில் வரும் செப். 25-ல் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடைபெறவுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்தார்.
சென்னையில் அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அரசின் 7 முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
குறிப்பாக, “முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமை பெண், தமிழ் புதல்வன், விளையாட்டின் சாதனையாளர்கள், சிறப்பு குழந்தை சாதனையாளர்கள் என்பன போன்ற ஏழு திட்டங்களை உள்ளடக்கிய இந்த சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 25 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பிலான விழா நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இவ்விழாவில் அரசு திட்டங்களால் பயனடைந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 14.60 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 5.29 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மூலமும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.