தமிழ்நாடு

திமுக அரசு மக்களை எவ்வளவு மதிக்கிறது என்பதைக் கள்ளக்குறிச்சி சம்பவம் காட்டுகிறது: தமிழிசை

தமிழக அமைச்சரவையில் இருந்து சு.முத்துச்சாமி நீக்கப்பட வேண்டும், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்

ராம் அப்பண்ணசாமி

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர், சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, `மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துச்சாமியின் அலட்சியம் காரணமாக 60-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சியில் மரணமடைந்ததால் தமிழக அமைச்சரவையில் இருந்து சு.முத்துச்சாமி நீக்கப்பட வேண்டும், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநர் ரவியிடம் பாஜவினர் அளித்தனர்.

தமிழக ஆளுநருடனான இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழிசை சௌந்திரராஜன்.

அப்போது, `இந்த விஷச்சாராய சம்பவத்தால் மக்கள் இறந்துள்ளனர், நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இந்த வழக்கை இட்டுச் செல்லும் முறை சரியாக இல்லை. இதில் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஆளுநரிடம் சிபிஐ விசாரணை கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறோம்’ எனக் கோரிக்கை மனு குறித்து விளக்கமளித்தார் தமிழிசை.

மேலும், `அங்கே சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் கண்பார்வை இழந்திருக்கின்றனர். இன்னும் பலர் அபாய கட்டத்தில் உள்ளனர். புதன்கிழமை தான் இந்த விவகாரத்தைக் கண்டுபிடித்ததாகச் சொன்னார்கள்.  ஆனால் செவ்வாய்கிழமையே மக்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர், இதைக் கண்டுபிடிக்க மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது’ என்று தெரிவித்தார் தமிழிசை.

`மக்கள் பாதிக்கப்பட்டு அத்தனை பேர் இறந்தபோது கூட, அந்தத் துறையின் அமைச்சரோ அல்லது முதல்வரோ அங்கே செல்லாதது, எந்த அளவுக்கு திராவிட மாடல் அரசு மக்களை மதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த விஷயத்தைக் கண்டித்து போராட பாஜகவினர் அனுமதிக்கப்படவில்லை. போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களைக் கைது செய்து இரவு 10 மணி அளவில் விடுவித்து மோசமாக நடத்தியுள்ளனர்’ எனக் குற்றம்சாட்டினார் தமிழிசை சௌந்தரராஜன்.