ANI
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: உயிரிழப்பு 49 ஆக அதிகரிப்பு, 30 பேர் கவலைக்கிடம்

சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 50, 60 பேர் நலமுடன் உள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை குறித்து விளக்கமளித்தார்.

"விஷச் சாராயம் குடித்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மொத்தம் 165 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சியிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். இவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளார்கள். 118 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 50, 60 பேர் நலமுடன் உள்ளார்கள். 30 பேர் பல்வேறு மருத்துவக் காரணங்களினால் கவலைக்கிடமாக உள்ளார்கள்.

நேற்று வரை எந்தவொரு சட்டம், ஒழுங்கு பிரச்னை கிடையாது. உயிரிழந்தவர்களில் 27 பேரின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு இன்று நிவாரணம் வழங்கப்படும்" என்றார் ஆட்சியர் பிரசாந்த்.

சமீபத்திய நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.