விஷச்சாராய விவாகரம் 
தமிழ்நாடு

விஷச்சாராய சம்பவத்துக்கு பயந்து விருப்ப ஓய்வு பெறவில்லை: முன்னாள் எஸ்.பி மோகன் ராஜ் மறுப்பு

யோகேஷ் குமார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன் ராஜ், தான் விஷச்சாராய சம்பவதுக்கு பயந்து விருப்ப ஓய்வு பெறவில்லை என கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் மோகன் ராஜ் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்பே இருந்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் விஷச்சாராய சம்பவத்துக்கும், தனது ஓய்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “எனது ஓய்வை கள்ளக்குறிச்சி துயர சம்பவத்துடன் தொடர்புபடுத்தி தற்போது சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நான் ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களே இருந்தபோது அமெரிக்காவில் உள்ள எனது மகள் மற்றும் மருமகளின் பிரசவத்தை கவனித்து கொள்வதற்காக எனது மனைவியுடன், நான் அங்கு செல்ல வேண்டி இருந்ததால் விருப்ப ஓய்வு பெற்றேன். ஆனால், நான் விஷச்சாராய சம்பவதுக்கு பயந்து விருப்ப ஓய்வு பெற்றதாக உண்மைக்கு புறம்பாக சிலர் பேசி வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.