மாதிரி படம் 
தமிழ்நாடு

சென்னையில் என்கவுன்ட்டரில் ரௌடி சுட்டுக்கொலை

காக்கா தோப்பு பாலாஜி மீது 5-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கிழக்கு நியூஸ்

சென்னை வியாசர்பாடியில் காக்கா தோப்பு பாலாஜி என்ற ரௌடி காவல் துறையினரால் இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காக்கா தோப்பு பாலாஜி மீது 5-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், கஞ்சா கடத்தல் என ஏறத்தாழ 50 குற்றவியல் வழக்குகள் உள்ளன. 10 முறை குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடுங்கையூர் காவல் துறை சார்பில் சிறப்புப் படை இவரைத் தேடி வந்தது. வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே பிஎஸ்என்எல் குடியிருப்பில் இவர் தலைமறைவாக இருப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காவல் துறையினர் இவரைச் சுற்றி வளைத்துள்ளார்கள்.

அப்போது காவல் துறையினரை நோக்கி காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு கார் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில் காக்கா தோப்பு பாலாஜி பலத்த காயமடைந்துள்ளார். ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதில் இவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இவருடைய உடலானது உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

காவலர்களை நோக்கி சுட்டதால் தற்காப்புக்காக என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாகக் காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

காவல் துறை ஆணையர் முத்துகுமார், வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் ஆகியோர் வியாசர்பாடியில் என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்கள்.