கோப்புப்படம் படம்: https://x.com/KASengottaiyan
தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை இணைக்க இபிஎஸ்-க்கு 10 நாள்கள் கெடு: கே.ஏ. செங்கோட்டையன் எச்சரிக்கை | KA Sengottaiyan

"யார் யாரை கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்பதைப் பொதுச்செயலாளர் முடிவு செய்துக்கொள்ளலாம்."

கிழக்கு நியூஸ்

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான முயற்சிகளை 10 நாள்களுக்குள் எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார் கே.ஏ. செங்கோட்டையன்.

இல்லையெனில், பிரிந்துசென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்கிற மனநிலையில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இடையே நீண்ட காலமாகப் பனிப்போர் நிலவி வருகிறது. கடந்த பிப்ரவரியில் அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி அதைப் புறக்கணித்தார் செங்கோட்டையன்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் பனிப்போர் நீடித்தது. கடந்த ஏப்ரலில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியபோதும், செங்கோட்டையன் அவையிலிருந்து வெளியேறாமல் இருந்தார். கூட்டத்தொடரின்போது எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காமல் இருந்தார்.

கடந்த சில நாள்களாக எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையிலான மனக் கசப்பு பெரிதளவில் பேசப்படாமல் இருந்தபோதும், இருவருக்கிடையிலான பனிப்போர் இன்னும் முடியவில்லை எனக் கூறப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில் தான் செப்டம்பர் 5 அன்று காலை 9 மணிக்கு மனம் திறந்து பேசவுள்ளதாக செங்கோட்டையன் வெளிப்படையாக அறிவித்தார். அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் காலத்திலிருந்தே கட்சியில் செல்வாக்கு படைத்தவர் செங்கோட்டையன். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிக்கப் போகிறாரா, மாற்றுப் பாதையைத் தேர்வு செய்யப்போகிறாரா எனப் பல்வேறு எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது.

செங்கோட்டையனின் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று (செப்டம்பர் 5) காலை முதல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் கூடி வந்தார்கள். செங்கோட்டையன் தனது வீட்டிலிருந்து காரில் புறப்பட்டார். பிறகு, பிரசார வாகனத்தில் மாறி தொண்டர்கள் படைசூழ சாலைப் பேரணியாக அதிமுக அலுவலகத்தை வந்தடைந்தார்.

இதற்கிடையே இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த முன்னோடி என்றார். எம்ஜிஆர் காலத்திலேயே செங்கோட்டையன் மாவட்டச் செயலாளர் என்றார் ஓ. பன்னீர்செல்வம். அதிமுகவுக்கு அவர் ஆற்றிய பணி அளப்பரியது என்றும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுக அலுவலகத்தை வந்தடைந்த செங்கோட்டையன், செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். தொண்டர்கள் செய்தியாளர் சந்திப்பைக் காண்பதற்கு ஏற்ப அலுவலகத்தில் எல்இடி திரை அமைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:

"1972-ல் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் கிளைக் கழகச் செயலாளராகப் பணியாற்றினேன். 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, அந்தத் தேர்தலில் மாயத் தேவர் போட்டியிட்டபோது, இந்தியாவிலேயே யாரும் பெறாத அளவுக்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1975-ல் கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவில் எம்ஜிஆர் என்னைப் பொருளாளராக நியமித்தார். எம்ஜிஆர் 10 ஆண்டுகாலம் சிறந்த ஆட்சியைத் தந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா பொறுப்பேற்றார். ஜெயலலிதா தான் தலைமையேற்க வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் வைத்தோம். அவர் சிறந்த ஆட்சியைத் தமிழ்நாட்டுக்குத் தந்தார்.

அதிமுகவைப் பொறுத்தவரை ஏழை, எளிய மக்களுக்காக, படித்தவர்களுக்காக, தொழில் செய்பவர்களுக்காக, தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக.

2016 தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவுக்குப் பல்வேறு சோதனைகள் வந்தபோது, எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கம் உடைந்துவிடக் கூடாது, இயக்கத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்று பொதுச்செயலாளராக சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம்.

பிறகு, முதல்வராக யார் வேண்டும் என்றபோது முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை முன்மொழிந்தார்.

எனக்கு இரு வாய்ப்புகள் வந்தபோதும், இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக என் பணிகளைச் செய்து வந்தேன்.

2016-க்குப் பிறகு தொடர்ந்து தேர்தல்களைச் சந்தித்து வருகிறோம். அது எவ்வளவு போராட்டமாக இருக்கும் என்பதை அறிவோம். 2019, 2021, 2024, உள்ளாட்சித் தேர்தல்களில் களத்தில் பல்வேறு பிரச்னைகள் இருந்துள்ளன. 2024-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வென்றிருக்க முடியும்.

தேர்தல் முடிந்தபிறகு, பொதுச்செயலாளரைச் சந்தித்தோம். சந்திப்புக்கான காரணமே, கட்சி தொய்வோடு இருக்கிறது, தேர்தல் களத்தில் எவ்வளவு வியூகம் வகுத்தாலும் வெற்றி வாகையைச் சூட முடியவில்லை, கழகம் ஒன்றிணைக்கப்பட வேண்டும், வெளியே சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும், மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம். சகோதரர் வேலுமணி, அண்ணன் நத்தம் விஸ்வநாதன், சகோதரர் தங்கமணி, சகோதரர் அன்பழகன் சி.வி. சண்முகம் ஆகிய நாங்கள் 6 பேரும் அவரைச் சந்தித்தோம்.

அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பொதுச்செயலாளர் இல்லை. மறப்போம், மன்னிப்போம். வெளியில் சென்றவர்களை நாம் அரவணைத்தால் மட்டுமே வெற்றி காண முடியும்.

ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, வெளியே சென்றவர்களை நாம் கட்சிக்குள் அரவணைக்க வேண்டும். வெளியில் சென்றவர்களை இணைத்தால் மட்டுமே நம்மால் வெற்றி காண முடியும். இது எம்ஜிஆர் நமக்குக் கற்றுத் தந்த பாடம். எல்லோரையும் அழையுங்கள். வெளியே சென்றவர்களை நம் கழகத்துக்குள் இணையுங்கள். வெளியே சென்றவர்கள் எந்தப் பொறுப்பும் தேவையில்லை, எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் எனும்போது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சி மலர்வதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். தேர்தல் களம் தொடங்கிவிட்டது. விரைந்து இதற்கான நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில், இந்த மனநிலையில் இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து இதைச் செய்வதற்கானப் பணியில் ஈடுபடுவோம்.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பதை விரைந்து செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் இதைச் செய்தால் மட்டுமே வெற்றிப் பயணத்தில் பங்கெடுப்பேன்.

யார் யாரை கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்பதைப் பொதுச்செயலாளர் முடிவு செய்துக்கொள்ளலாம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. தென் மாவட்டங்களில் என்ன நிலை என்பது தெரியும். எனவே அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். ஒருங்கிணைத்தால் மட்டுமே மாபெரும் வெற்றி கிடைக்கும்.

ஒரு அவகாசம் வைத்திருக்கிறேன். 10 நாள்களுக்குள் இதைச் செய்ய வேண்டும். பேச்சுவார்த்தைகள் ஒரு மாதம் கூட நடக்கலாம். ஆனால், அதற்கான முயற்சிகளை முதலில் எடுக்க வேண்டும். கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்" என்றார் செங்கோட்டையன்.

KA Sengottaiyan | ADMK | Edappadi Palaniswami