தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பட்டினம்பாக்கம் இல்லத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சென்றுள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை அதிமுக தலைமை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கடந்த செப்டம்பரில் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்தார். இதன் காரணமாக செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவருடைய ஆதரவாளர்களின் பதவிகளும் அடுத்தடுத்து பறிக்கப்பட்டன.
தொடர்ந்து, கடந்த அக்டோபரில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதன் காரணமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அதிமுகவுக்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது மனவேதனையைத் தருவதாகச் சொன்னார்.
இதற்கிடையே, நவம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணையவுள்ளதாகத் தகவல்கள் கசிந்தன. இதுபற்றி செய்தியாளர்களிடம் எதையும் தெரிவிக்காமல் மௌனத்தைக் கடைபிடித்து வந்தார்.
இன்று காலை தலைமைச் செயலகத்துக்குச் சென்ற செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் சென்னை பட்டினம்பாக்கத்திலுள்ள விஜயின் இல்லத்துக்கு செங்கோட்டையன் சென்றுள்ளார். விஜயை நேரில் சந்திக்க ஆதவ் அர்ஜுனாவின் இன்னோவா காரில் செங்கோட்டையன் சென்றதாகத் தகவல்கள் வெளியாகின.
தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் ஒருபுறம் தகவல்கள் கசிந்து வருகின்றன.
KA Sengottaiyan | Sengottaiyan | TVK Vijay | Vijay |