படம்:https://twitter.com/RaktimROfficial
தமிழ்நாடு

நிர்மலா தேவி வழக்கு: ஏப்ரல் 29-க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

கிழக்கு நியூஸ்

கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்புடைய வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பை ஏப்ரல் 29-க்கு ஒத்திவைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தைகளைக் காட்டி தவறாக வழிநடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்புடைய புகாரில் பேராசிரியர் நிர்மலா தேவி மீது 2018-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவருக்குத் துணையாக இருந்து செயல்பட்டதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்புடைய விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி அறிவித்திருந்தார்.

நீதிமன்றத்தில் இன்று முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜரானார்கள். உடல்நலக் குறைவு காரணமாக நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக, வழக்கின் தீர்ப்பானது ஏப்ரல் 29-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.