படம்: https://www.instagram.com/mariewilson_tvk
தமிழ்நாடு

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம்: மரிய வில்சன் | Karur Stampede |

"கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கவுள்ளேன். ஆயுள் காப்பீடு செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி..."

கிழக்கு நியூஸ்

கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தவெக நிர்வாகி மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

எம்ஜிஆர் காலத்து அதிமுகவின் முக்கிய முகமாக இருந்தவர் ஜேப்பியார். இவருடைய மருமகன் மரிய வில்சன், ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவராக உள்ளார். இவர் அண்மையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதனிடையே, கரூரில் விஜய் மேற்கொண்ட மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தார்கள். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவராகவும் தவெக நிர்வாகியாகவும், "பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான பள்ளி, கல்லூரிச் செலவுகளை ஏற்கவும் எங்கள் குழுமத்தில் வேலை வாய்ப்பை வழங்கவும் ஆயுள் காப்பீடு செய்யவும் நான் தயாராக இருக்கிறேன்" என மரிய வில்சன் கடந்த அக்டோபர் 1 அன்று அறிக்கை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, கரூர் மக்களுக்கு உதவுவது குறித்த அறிவிப்பை நேற்று (அக்டோபர் 13) வெளியிட்டார் மரிய வில்சன்.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்திருந்ததாவது:

"கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டான பலன் சென்று சேர வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறேன். அக்குழு நாளை அவர்களைச் சந்திக்கிறது. ஏற்கெனவே நான் அறிவித்தபடி கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கவுள்ளேன். ஆயுள் காப்பீடு செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவர்/தலைவிக்கு மாதந்தோறும் ரூ. 5 ஆயிரத்தை வாழ்நாள் முழுக்க வழங்க இருக்கிறேன். நாளை முதல் என் குழு செயல்பாட்டை ஆரம்பிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மரிய வில்சன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி, மரிய வில்சன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதவிகள் குறித்து விளக்கி வருவதாகவும் இதுதொடர்பாக கையெழுத்துகளைப் பெற்று வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன.