அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் வரும் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு ஊழியர்கள் - ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம், அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது, 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்குவது, ஊதிய முரண்பாட்டை களைவது என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர் சங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசுடன் பேச்சுவார்த்தை
இதையடுத்து, அரசு ஊழியர்கள் சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடந்த, கடந்த பிப்ரவரி மாதம், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டன. ஆனால், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து மீண்டும் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக ஆசிரியர்கள் சங்கங்கள் அறிவித்தன. அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் நேற்று (டிச. 22) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டம் அறிவிப்பு
தலைமைச் செயலகத்தில் காலை 11.15 மணி அளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை மதியம் 2 மணிக்கு மேல் நீடித்தது. ஆனால், இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று தெரிய வருகிறது. இதையடுத்து வரும் 29 அன்று மாவட்டத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஜனவரி 6 முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் அதிருப்தி
இதையடுத்து, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் த.அமிர்தகுமார் கூறியதாவது:-
எங்கள் கோரிக்கைகளை விளக்கிச் சொன்ன பிறகு முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவைச் சொல்கிறோம் என்று அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருவது ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும் அதிருப்தி அளிக்கிறது. தொடர்ந்து நிதி பிரச்னை என்று ஏற்கெனவே சொல்லி வந்ததையே மீண்டும் சொல்கிறார்கள். எனவே, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. வரும் 29 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.
Following the failure of negotiations with the government, government employees' and teachers' unions jactto geo have announced that they will engage in an indefinite strike starting from January 6.