கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

நாய் ஆர்வலர்கள் நாய் கடிக்காது எனக் கூறுவது தவறான கருத்து: ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்

கிழக்கு நியூஸ்

’செல்லப்பிராணி வளர்க்கும் மக்கள் அண்மைக்காலங்களில் அதற்குரிய உரிமத்தை மாநகராட்சியிடம் இருந்து வாங்குவதில்லை. அதைவிட முக்கியமாகத் தங்கள் நாய்களை பாதுகாப்பற்ற முறையில் வெளியே அழைத்துச் செல்கின்றனர். அவரவர் சட்ட விதிகளை மட்டும் கூறியபடி இருந்தால் தீர்வு கிடையாது. நாயைக் குழந்தை என்கிறீர்கள் அது குழந்தையைக் கடிப்பது நியாயமா?’ என்று நாய் ஆர்வலர்களுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார் ராதாகிருஷ்ணன்.

’சென்னையில் உள்ள நாய்கள் குறித்து ஒரு மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படும். நாய்களை வளர்ப்பவர்களுக்கு பொறுப்பும், மற்றவரை தொல்லை செய்யக்கூடாது என்ற எண்ணமும் முக்கியம்’ எனத் தன் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு சென்னையில் நடக்கும் இந்த நாய்க்கடி பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விசயத்தில் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி எந்த தரப்பினருக்கும் பிரச்சனை வராதபடி முடிவெடுக்கப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ராதாகிருஷ்ணன்.

மெரினாவில் தமிழ்நாடு அரசின் கால்நடைப் பராமரிப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட வெறிநாய்கடி நோய் தடுப்பூசி முகாமில் அரசு கால்நடை மருத்துவர்கள், செல்லப்பிராணி வளர்ப்பவர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொது இடத்துக்கு செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்லும்போது அதன் உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைக் கடந்த மாதம் சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.