தமிழ்நாடு

மருத்துவம் தொடர்பான விஷயங்களில் பரபரப்பைக் கிளப்புவது தவறு: எழிலன் எம்.எல்.ஏ.

இந்த மாதிரியான நேரங்களில் மருத்துவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் வழிகளில் இறங்கினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளின் நிலை கேள்விக்குறியதாகிவிடும்.

ராம் அப்பண்ணசாமி

மருத்துவம் தொடர்பான விஷயங்களில் பரபரப்பை கிளப்புவது தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்புக்கு பாதிப்பாக முடியும் என பேட்டியளித்துள்ளார் திமுக மருத்துவ அணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான எழிலன் நாகநாதன்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில், இளைஞர் ஒருவரால் கத்தி குத்துக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவர் பாலாஜியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து எழிலன் நாகநாதன் வழங்கிய பேட்டி பின்வருமாறு,

`அரசு கட்டமைப்பில் பணிபுரிந்த ஒரு மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன். பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவரை அதிகாலை 3.30 மணிக்கு மருத்துவரிடம் அழைத்து வருவார்கள். உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்து வருவார்கள். ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவரும், செவிலியரும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.

பாம்புக் கடிக்கான மருந்து குதிரையில் இருந்து பெறப்படுவதால் ஒரு சிலருக்கு அதனால் ஒவ்வாமை ஏற்படும். அப்போது ஒவ்வாமைக்காகவும் சிகிச்சை வழங்கப்படும். ஆனால் ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது நீங்கள் தவறான மருந்தை வழங்கிவிட்டீர்கள் என நோயாளியுடன் வந்தவர்கள் பிரச்னையை கிளப்பலாம். அதனால் ஊடகங்களின் வழியாக பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

மருத்துவத்துறையில் பரபரப்பைக் கிளப்பக்கூடாது. சில சூழ்நிலைகளில் மருத்துவர்கள் அபாயகரமான முயற்சிகளை மேற்கொள்ளவே செய்வார்கள். இந்த மாதிரியான நேரங்களில் மருத்துவர்களும் தங்களை தற்காத்துக்கொள்ளும் வழியில் இறங்கினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளின் நிலை கேள்விக்குறியதாகிவிடும்.

மருத்துவம் தொடர்பான ஒவ்வொரு விஷயத்திலும் இதைப்போல பரபரப்பை கிளப்புவது தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்புக்கே பாதிப்பாக முடியும். இந்த மாதிரியான விவகாரங்களில் அரசியல் செய்வது இயல்பு. ஆனால் பேரிடர்களிலும், மருத்துவத்திலும் பகுத்தறிவுடன் நடந்துகொள்வதுதான் பொதுமக்களின் நலன்களுக்கு நல்லது’ என்றார்.