மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாவை விமர்சனம் செய்யும் வகையில் காணொளி வெளியிட்டது வருத்தமளிப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முருக பக்தர்கள் மாநாடு மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் மறைமுகமாக விமர்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று (ஜூன் 23) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது,
`அந்த காணொளியை தயாரித்தவர்கள் யார் என்று தெரியாது. பேரறிஞர் அண்ணாவுக்கென பெருமைகள் பல இருக்கின்றன. அடித்தட்டு மக்களை அரசியல் அதிகாரத்திற்குக் கொண்டு வந்த தலைவர்களில் முதன்மையானவர் பேரறிஞர் அண்ணா. பெரியாருடைய சீர்திருத்த கருத்துகள் ஆயிரம் இருக்கின்றன.
பல நேரங்களில் சில பேருக்கு பிடிக்காத கருத்துகள் அதில் இருக்கலாம். அது பல பேருக்கு பிடித்த கருத்துகளாக இருக்கலாம். அதுபோல அண்ணாவுடைய பேச்சும் நடையும், எழுத்தும், செயலும் சிலருடைய மனதை புண்படுத்தியிருக்கலாம். அதனுடைய வெளிப்பாடாக அந்த காணொளி இருக்கலாம்.
அண்ணாவை பொறுத்தவரையில், அவர் பேரறிஞர் பெருந்தகை என்ற பொருளுக்கு சொந்தக்காரர். அண்ணா என்ற ஒருவர் பிறந்த காரணத்தினால்தான் சாமானியன், அடித்தட்டு மக்கள், ரிக்ஷா ஓட்டுபவர், ஆட்டோ ஓட்டுனர், கைவண்டி இழுப்போர், மூட்டை தூக்குவோர் எல்லாம் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகி, கோட்டையில் அமரக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன.
ஒரு நிகழ்ச்சியில் நடக்கின்ற 99 சதவீத நல்ல நிகழ்வுகள் பற்றி நாம் பேசுவோம். அதில் நடந்த ஒரு நிகழ்வு பற்றிப் பேசி அந்த ஒட்டுமொத்த மாநாட்டினுடைய நல்ல கருத்துகளை எல்லாம் புறக்கணிக்க முடியாது. அண்ணாவை வஞ்சிப்பதைப்போல, புறக்கணிப்பதைப்போல நடந்திருப்பது வருத்தமளிக்கிறது, அதை புறக்கணித்திருக்கலாம்.
இன்றைய அரசியல் சூழலில் மறைந்த தலைவர்களை பற்றி நல்ல நிகழ்வுகளை பேசுவதுதான் சாலச் சிறந்தது. அவரிடம் இருந்த முற்போக்கான கொள்கைகள் பற்றி, அந்த நேரங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி இப்போது விமர்சனம் செய்வது தேவையற்ற விவாதத்தை உண்டு செய்திருக்கிறது. இது தேவையற்றது’ என்றார்.