தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு கோயில்கள் மூலம் கிடைக்கும் பணத்தில், கல்லூரி கட்டுவதைக் கண்டித்து அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கோவையில் நேற்று (ஜூலை 8) நடைபெற்ற `மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
`அறநிலையத்துறையில் பணம் இருப்பதை (அவர்களால்) பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் (அதை) நான் சொல்லக்கூடாது, என்னவென்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள். நான் கூறினால் வேறுவிதமாகிவிடும். கண்ணை உறுத்துகிறது, (அவர்களுக்கு) கோயிலைக் கண்டாலே கண் உறுத்துகிறது.
அதில் இருக்கும் பணம் அனைத்தையும் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கின்றனர். கோயில் கட்டுவதற்காக உங்களைப்போல இருக்கின்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள், தெய்வ பக்தி இருக்கின்றவர்கள் உண்டியலில் பணம் செலுத்துகிறீர்கள், அது அறநிலையத்துறையை சேருகிறது.
எதற்காக உண்டியலில் பணம் செலுத்தப்படுகிறது? அந்த கோயில்களை அபிவிருத்தி செய்யவேண்டும். அதற்காகவே நீங்கள் பணம் கொடுக்கிறீர்கள். அந்த பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். ஏன் அரசாங்கம் சார்பில் கல்லூரி கட்டவேண்டிய அவசியம் எழவில்லையா? அதிமுக ஆட்சியில் பல கல்லூரிகளை நாங்கள் கட்டிக்கொடுத்திருக்கிறோம்.
அத்தனை கல்லூரிகளும் அரசாங்கப் பணத்தில் கட்டப்பட்டது. நீங்கள் அப்படியல்ல. வேண்டும் என்றே திட்டமிட்டு அறநிலையத்துறை நிதியை எடுத்து இதற்கு செலவழிப்பது எந்த விதத்தில் நியாயம்? (இதை) சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதையெல்லாம் ஒரு சதிச்செயலாக மக்கள் பார்க்கின்றனர்.
மக்கள் என்னிடம் இது குறித்து கோரிக்கை வைத்தனர். கல்விக்கு வேண்டாம் என்று சொல்லவில்லை, கல்வி முக்கியம். ஆனால் அந்த கல்விக்கு அரசாங்கத்தில் இருந்தே கொடுக்கலாம். ஏன் அரசாங்கத்தில் பணம் இல்லையா? பத்து கல்லூரிகளுக்குத் தேவையான பணம் இல்லையா?
ஒரு சாதாரண கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அரசாங்க நிதியில் இருந்து கட்ட முடியவில்லை என்றால் இத்தகைய அரசாங்கம் தேவையா?’ என்றார்.