தமிழ்நாடு

விவசாயிகள் வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா?: ராமதாஸ்

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த திமுக, அதை செயல்படுத்தத் தவறியதால் உழவர்களுக்குப் பேரிழப்பு.

ராம் அப்பண்ணசாமி

பிற மாநிலத்தை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாக இருக்கும் கரும்பு கொள்முதல் விலையை முன்வைத்து, விவசாயிகள் வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இது தொடர்பாக இன்று (டிச.27) அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,

`பஞ்சாப் மாநிலத்தில் ஒரு டன் கரும்பு ரூ. 4100 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த்சிங் மான் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே கரும்புக்கு அதிக கொள்முதல் விலையை வழங்குகிறது பஞ்சாப். ஆனால், தமிழ்நாட்டில் நடப்புப் பருவத்தில் ஒரு டன்னுக்கான கொள்முதல் விலை ரூ. 3150 மட்டுமே.

இது மத்திய அரசு அறிவித்த விலை. தமிழ்நாடு அரசு சார்பில் நடப்பாண்டில் ஊக்கத்தொகை இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதனால் பஞ்சாப் மாநிலத்தில் வழங்கப்படுவதை விட தமிழ்நாட்டில் டன்னுக்கு ரூ. 950 குறைவாக கொள்முதல் விலை வழங்கப்படுகிறது.

ஒரு ஏக்கருக்கு கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ. 38,000 இழப்பு ஏற்படும். இப்படியெல்லாம் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?

2024-2025-ம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் 10.25 சதவீத சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ. 3,400 ரூபாயும், 9.50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான திறன் கொண்ட கரும்புக்கு ரூ. 3,150 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

பஞ்சாப் கரும்பு 10 சதவீத சர்க்கரைத் திறன் கொண்டது என்பதால் அதற்கு மத்திய அரசின் விலை ரூ. 3400, மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ. 710 என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கரும்புகளுக்கு அதிகபட்ச சர்க்கரைத் திறன் 9.50 சதவீதம்தான் இருக்கும் என்பதால், அவற்றுக்கு ரூ. 3150 மட்டுமே கிடைக்கும்.

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் கொள்கை கடைபிடிக்கப்படுவதுதான் பஞ்சாபில் உழவர்களுக்கு அதிக விலை கிடைக்க காரணம். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை சர்க்கரை ஆலைகள் வழங்கிவிடும் என்பதால் அரசுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லை; அதே நேரத்தில் உழவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

தமிழ்நாட்டிலும் 2017 வரை குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கும் முறை அமலில் இருந்தது. ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த போது அந்த முறை கைவிடப்பட்டு ஊக்கத்தொகை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

2016-ல் ஒரு டன் கரும்புக்கு ரூ. 650 ஊக்கதொகை சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. அதே முறை நீடித்திருந்தால் ஊக்கத்தொகை இப்போது ரூ.1000 ஆக உயர்ந்திருக்கும். அதனால் ஒரு டன் கரும்புக்கு ரூ.4150 கிடைத்திருக்கும்.

ஆனால், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த திமுக, அதை செயல்படுத்தத் தவறியதால் உழவர்களுக்கு பேரிழப்பு ஏற்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நடைமுறைப்படுத்துவதால் அரசுக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படாது.

மாறாக, ஊக்கத்தொகை முழுவதையும் சர்க்கரை ஆலைகள் ஏற்றுக்கொள்ளும் என்பதால், அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை அரசுக்கு மிச்சமாகும். ஆனால், சர்க்கரை ஆலைகளுக்கு அதிக செலவு ஏற்படும், எனவே அதைத் தாங்கி கொள்ளமுடியாது என்பதால் அந்த முறையை செயல்படுத்த திமுக அரசு மறுக்கிறது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம்.

தமிழகத்தில் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ரூ. 3500 செலவாகிறது எனும் போது 50% லாபமாக ரூ. 1750 சேர்த்து டன்னுக்கு ரூ. 5250 கொள்முதல் விலை வழங்க வேண்டும். குறைந்தது டன்னுக்கு ரூ. 5000 ஆவது வழங்க வேண்டும்.

மத்திய அரசு அதன் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ. 4000 அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அதன் பங்குக்கு சர்க்கரை ஆலைகள் மூலம் ரூ. 1000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்து விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.