பட உதவி: சாட்ஜிபிடி
தமிழ்நாடு

குழந்தையைக் கட்டைப்பையில் எடுத்துச் சென்ற தந்தை: நடந்தது என்ன? | Chennai

குழந்தையும் தாயும் தற்போது கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

கிழக்கு நியூஸ்

சென்னையில் பிறந்த குழந்தையைக் கட்டைப்பையில் கொண்டு சென்று சாலையில் கிடந்த குழந்தை எனத் தந்தை நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

சென்னையில் இளைஞர் ஒருவர், சாலையில் குழந்தை கிடந்ததாகக் கூறி, அக்குழந்தையைக் கட்டைப்பையில் எடுத்துக்கொண்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கச் சென்றார். அப்போது காவல் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட, அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளார்கள்.

விசாரணையில் சென்னையில் விடுதியொன்றில் தங்கிப் படித்து வரும் இளம்பெண் ஒருவர் மற்றும் அந்த இளைஞருக்கும் பிறந்த குழந்தை அது என்பது தெரிய வந்தது.

சம்பந்தப்பட்ட இளைஞரும், இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளார்கள். இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தை 7 மாதத்திலேயே பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததால், இருவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இருவருக்கும் குழந்தை பிறந்தது பற்றி வீட்டில் யாருக்கும் தெரியாது எனத் தெரிகிறது.

இதனால், குழந்தையை எப்படி மறைக்கலாம் என இருவரும் யோசித்ததாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாகவே, தனது சொந்தக் குழந்தையைக் கட்டைப்பையில் போட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒப்படைக்கச் சென்றுள்ளார் சம்பந்தப்பட்ட இளைஞர்.

குழந்தையும் தாயும் தற்போது சிகிச்சைக்காக கஸ்தூரிபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். காவல் துறையினர் இதுதொடர்பாக இளைஞரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Chennai | Chennai Baby | New Born Baby | Hospital | Young Couple | GH | Government Hospital