பொதுக்கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் வந்ததால் சம்மந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எச்சரிக்கும் தொனியில் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கடந்த மாதம் முதல் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, நேற்று (ஆக. 18) வேலூர் மாவட்டம் அணைக்கட்டு புதிய பேருந்து அருகே உள்ள வேலூர்-ஆலங்காயம் சாலையில் கூடியிருந்த மக்களிடையே பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது கூட்டத்திற்கு உள்ளே ஒரு ஆம்புலன்ஸ் வந்ததும் எரிச்சலடைந்த எடப்பாடி பழனிசாமி, `ஒவ்வொரு முறையும் நான் பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஆம்புலன்ஸை விடுகிறார்கள். ஆரம்பத்தில் இருந்து கிட்டத்தட்ட 30 கூட்டங்களில் இதை பார்த்து வருகிறேன். இதேபோல ஆம்புலன்ஸை கூட்டத்திற்கு அனுப்புகிறார்கள்.
ஆக, இந்த அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். அடுத்த முறை ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸ் நோயாளியை ஏற்றிச்செல்வது போலத்தான் இருக்கும். வெறும் வண்டியாக ஆம்புலன்ஸ் வந்தால், அதை யார் ஓட்டிக்கொண்டு வருகிறாரோ அவர் நோயாளியாக மாறி மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நிலைமை வரும்’ என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பிவின் இன்று (ஆக. 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
`நேற்று (ஆக. 18) இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்தவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை வழிமறித்து அவமதித்து, அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.
நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பதுதான் எங்களின் பணி அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவில்லை என்றாலும், இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது.
இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.