வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 12 தொகுதிகளில் போட்டியிட ஆசை உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளரும், எம்.பி.யுமான துரை. வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளதாக, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக கூறி வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக திருச்சியில் இன்று (ஜூன் 21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது,
`நான் அதை சொல்லவில்லை. அதிக தொகுதிகள் கேட்பீர்களா என்று கடந்த முறை என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. நான் ஒரு முதன்மை செயலாளர், அந்த முடிவை நான் எடுக்க முடியாது. ஒரு இயக்கத்தைப் பொறுத்தளவில் இயக்கத்தின் தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் ஆசை இருக்கும்.
கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் கட்சி கேட்கிறது என்றால் அவர்களுக்கு உரிமை இருக்கிறது; அதில் தவறொன்றும் இல்லை. எந்த அரசியல் இயக்கமும் வளரவேண்டும் என்றுதான் நினைக்கும். இத்துடன் போதும் என்பது கிடையாது.
மதிமுகவை பொறுத்தவரை எங்கள் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் பெறவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் நின்றால்தான் அங்கீகாரம் கிடைக்கும். இது அனைவருக்குமே தெரியும். அந்த ஆசை எங்களுக்கு உள்ளது’ என்றார்.
மேலும், தங்களுக்கு சுயமரியாதை உள்ளது என்பதால் வியாபார அரசியலில் ஈடுபடமாட்டோம் என்றும், திமுக கூட்டணியில் தொடருவோம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.