அமைச்சர் மா. சுப்பிரமணியன் (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

முதற்கட்டமாக 1,000 செவிலியர்களுக்குப் பணி நிரந்தரம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் | Ma. Subramanian |

ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, கோவிட் செவிலியர்களுக்குப் பணி ஆணை வழங்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

கிழக்கு நியூஸ்

முதற்கட்டமாக 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, செவிலியர்கள் தங்களுடைய போராட்டத்தை முடித்துக்கொள்வதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் கடந்த ஒருவார காலமாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 8,322 பேரையும் பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என செவிலியர்கள் தீவிரமாக இருந்து வந்தார்கள்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செவிலியர்களுடன் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின்போது 723 தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவிருப்பதாக மா. சுப்பிரமணியன் உறுதியளித்திருக்கிறார். ஆனால், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் செயலர் சுபின் கூறுகையில், "8 ஆண்டுகளாகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். வெறுமென 723 பேருக்கு மட்டும் பணி நிரந்தரம் வழங்குவதை ஏற்க முடியாது" என்று கூறி போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். இது தவிர செயலருடனும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், மா. சுப்பிரமணியன் இன்று காணொளி வாயிலாக மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்குப் படிப்படியாக பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்று செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்வதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 18 அன்று சிவானந்தா சாலையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது காவல் துறையினர்கள் இவர்களைக் கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார்கள். பிறகு, கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.

Ma. Subramanian | Nurses Protest | Protest | Nurses Appointment | Permanent Nurses |