தமிழ்நாடு

தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் 9-க்கும் குறைவு

ராம் அப்பண்ணசாமி

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் 9-க்கும் குறைவாக உள்ளது. 2020-ல் தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் 13-ஆக இருந்தது என்று தெரிவித்தார் முன்னாள் மருத்துவத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு 105 மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக அரசு மருத்துவத்துறையின் முன்னாள் செயலர் ககன் தீப் சிங் பேடி, தமிழகத்தின் குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் கர்ப்பிணிகள் இறப்பு விகிதம், போன்றவை குறைந்துள்ள தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஒரு வயதுக்கும் குறைவாக உள்ள 1000 குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் இறக்கின்றன என்பதை வைத்து `குழந்தைகள் இறப்பு விகிதம்’ மாநில வாரியாக கணக்கிடப்படும். 2020-ல் தேசிய அளவில் இந்தியாவின் `குழந்தைகள் இறப்பு விகிதம்’ 28 ஆக இருந்தது. இது குறித்துப் பேசிய பேடி,

மருத்துவர்களின் சீரிய முயற்சிகளால், குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் குறைந்துள்ளன. தமிழ்நாட்டின் கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் 2020-ல் 52 ஆக இருந்தது. இப்போது 48 ஆகக் குறைந்துள்ளது. 2020-ல் தேசிய அளவில் இந்தியாவின் `கர்ப்பிணிகள் இறப்பு விகிதம்’ 97 ஆக இருந்தது.

தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ள அதே நேரத்தில், சிசேரியன்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மாநிலத்தில் பார்க்கப்படும் பிரசவங்களில் 70% அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. சில அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளை விட சிறப்பாக உள்ளன என்றார்.