தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் அக்டோபர் 27 அன்று புதிய புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், கடந்த வாரம் அரபிக் கடல் பகுதியிலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியிலும் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகின. இவற்றால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்தது. தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.
பின்னர் வங்கக் கடல் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திடீரென வலுவிழக்கத் தொடங்கியது. அது வடக்கு உள்பகுதி தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு உள்பகுதி கர்நாடகம் அருகே நிலைகொண்டு பின்னர் முற்றிலுமாக வலுவிழந்தது. இதனால் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்நிலையில், வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இன்று காலை 5 மணி அளவில் வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்த அது, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இது, வரும் அக்டோபர் 27 அன்று புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது நாளை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து வடகிழக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை (அக்.25) வலுப்பெறும். தொடர்ந்து அக்டோபர் 26 அன்று ஆழ்ந்த்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, அக்டோபர் 27 அன்று காலை வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் புயலாக உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு தாய்லாந்து நாடு ‘மோந்தா’ (Montha) என்ற பெயரை வழங்கியுள்ளது.
The India Meteorological Department has forecasted that a new cyclone will form in the southeast Bay of Bengal on October 27.