சென்னை உள்ள பிரபல சீ ஷெல் உணவகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றுவரும் நிலையில், அந்த உணவங்களுக்கும், தனக்கும் தொடர்பில்லை என்று நடிகர் ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையின் அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, துரைப்பாக்கம், கந்தன்சாவடி உள்ளிட்ட இடங்களில் சீ ஷெல் உணவகங்கள் இயங்கிவருகின்றன.
இந்த உணவகங்களில் முதலீடு செய்யப்பட்ட பணத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், கேரள மாநிலம் கொச்சியில் வருமான வரித்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், அண்ணா நகரில் உள்ள சீ ஷெல் உணவகத்தில் இன்று (ஜூன் 18) காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதேபோல, சென்னையில் உள்ள பிற `சீ ஷெல்’ கிளைகளிலும் சோதனை தொடங்கியுள்ளது.
இந்த உணவகங்கள் நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமானவை என்று முன்பு கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், வருமான வரி சோதனையை முன்னிட்டு தனக்கும், இந்த உணவகங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று ஆர்யா விளக்கமளித்துள்ளதாக புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த உணவகங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு குன்ஹி மூசா என்பவர் தன்னிடம் இருந்து வாங்கிவிட்டதாகவும் அவர் தகவலளித்துள்ளார். தரமணியில் உள்ள குன்ஹி மூசாவின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.