கோப்புப்படம் 
தமிழ்நாடு

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம் | Rain Update |

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு....

கிழக்கு நியூஸ்

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அக்டோபர் 21 அன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரு நாள்களாக மழை தீவிரமாகப் பெய்தது. இது வடதமிழகக் கடலோரப் பகுதிகளை ஒட்டி வருவதால் அக்டோபர் 21 முதல் அக்டோபர் 22 காலை வரை மழை தீவிரமாகப் பெய்யும் எனக் கணிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று (அக்.22) பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று மழை படிப்படியாகக் குறைந்தது. இதையடுத்து, வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தமிழ்நாட்டின் வடக்கு உள்பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகப் பலவீனமடைந்து. வடக்கு உள்பகுதி தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு உள்பகுதி கர்நாடகத்தில் இன்று நிலைகொண்டுள்ளது. இது தெற்கு உள்பகுதி கர்நாடகத்தில் மேற்கு - வடமேற்கு நோக்கி தொடர்ந்து நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக வட கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.