ANI
தமிழ்நாடு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வடகிழக்குப் பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் விலகும்.

ராம் அப்பண்ணசாமி

தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் வரும் ஜன.30, 31 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

`தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து அடுத்த ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை முற்றிலுமாக விலகுவதற்கான சூழ்நிலைகள் உள்ளன.

இன்றும் (ஜன.27), நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் ஜன.29-ல் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.30-ல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜன.31-ல் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்.1-ல் உள்தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’.

2024 அக்.15-ல் தொடங்கிய வடகிழக்கு பருவமழை 100 நாட்களுக்கும் மேல் நீடித்துள்ளது. இதற்கு முன்பு 2005-ல் வடகிழக்கு பருவமழை 97 நாட்கள் நீடித்ததே அதிகபட்சமாக இருந்தது.