தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மோன்தா புயல் இன்று இரவு ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிகக் கனமழை எச்சரிக்கைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று (அக்.27) காலை 5:30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘மோன்தா’ என்று தாய்லாந்து பெயரை வழங்கியது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 7 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று காலை மோன்தா புயல், மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றது. மேலும் ஆந்திர மாநிலத்தின் மச்சிலிப்பட்டினத்திற்கு 190 கி.மீட்டர் தொலைவிலும் காக்கிநாடாவுக்கு 260 கி.மீட்டர் தொலைவிலும் விசாகப்பட்டினத்திற்கு 340 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
மேலும், இன்று மாலை அல்லது இரவுக்குள் இப்புயல் ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையில் காக்கிநாடாவுக்கு அருகே தீவிரப் புயலாகவே கரையைக் கடக்கும். இதனால் அப்பகுதியில் மணிக்கு 90 - 100 கி.மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 110 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வட தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், தென் தமிழ்நாட்டில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The India Meteorological Department has announced that Cyclone Montha, which has intensified into a severe storm, will cross near Kakinada in Andhra Pradesh tonight. Due to this, a very heavy rainfall warning has been issued for Thiruvallur district.