தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று (நவ. 26) நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது. இதையடுத்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில், வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று காலை 05:30 மணிக்கு அதே பகுதியில் மையம் கொண்டது. இலங்கைக்கு கிழக்கு - வடகிழக்கில் சுமார் 150 கிமீ தொலைவிலும், தென்கிழக்கில் 190 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வழியாக வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, புயலாக தீவிரமடைந்துள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு கடற்கரைக்கு மிக அருகில் சென்று, தெற்கு ஆந்திர கடற்கரையை அடுத்த 48 மணி நேரத்தில் வந்தடையும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
சென்னை மற்றும் புதுச்சேரி கடற்கரைக்கு மிக அருகில் இந்தப் புயல் வரவுள்ளது. இதனால் வரும் நவம்பர் 29 அன்று நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்யும். தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், நாமக்கல், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் மிக கனமழையும் பெய்யும். வரும் 30 அன்று சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் கடலோரப் பகுதி, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் அதிகனமழையும், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டையில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியில் இந்தப் புயல் கரையைக் கடந்தால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் பெங்களூருவிலும் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
The India Meteorological Department has announced that the low-pressure area over the southwest Bay of Bengal is likely to intensify into a cyclonic storm in the next 12 hours.