ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதர் மோடி ANI
தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு அழியாப் புகழ் கிடைக்கும்: ராமர் கோயில் குறித்து இளையராஜா

இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே... இதைச் சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது.

கிழக்கு நியூஸ்

ராமர் கோயிலைக் கட்டியதால் பிரதமர் மோடிக்கு சரித்திரத்தில் அழியாப் புகழ் கிடைக்கும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபா அரங்கில் ‘சென்னையில் அயோத்தி’ என்கிற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இசையமைப்பாளர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது:

இன்றைய நாள் சரித்திரத்தில் முதல்முறையாக நடைபெறும் நாள். ராமர் கோயிலைக் கட்டியதால் பிரதமர் மோடிக்குச் சரித்திரத்தில் அழியாப் புகழைச் சேர்த்துத் தரும். யாருக்குக் கிடைக்கும் இந்தப் பாக்கியம்? யாரால் முடியும்? எல்லோராலும் செய்துவிட முடியுமா? யாராலும் செய்ய முடியாது. பிரதமர் நரேந்திர மோடிக்கு என்று எழுதியிருக்கிறது பாருங்கள்.

இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். யார் யார் என்னென்ன செய்தார்கள் என்று பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே... இதைச் சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது. அயோத்தியில் இன்று நான் இல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இந்தியாவில் எத்தனையோ கோயில்கள் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் ஆண்ட மன்னன் கட்டிய கோயிலாகத்தான் அது இருக்கும். இந்தியாவுக்கு மொத்தமாக ஒரு கோயில் உருவாகியிருக்கிறது என்றால், அது இதுதான். பாண்டிய, சேர, சோழ மன்னர்கள் கோயில்களைக் கட்டினார்கள். ஒரு மன்னன் ஒரு கோயிலைக் கட்டினான், சிறிய நாட்டிலே. இதை என்னவென்று சொல்வது? இந்தியாவுக்கு மொத்தமாக, முழுமையாக, ராமபிரானுக்காக அவர் பிறந்த இடத்திலேயே கட்டிய அதிசயத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மன்னர்கள் செய்த வேலையை நமது பிரதமர் செய்திருக்கிறார் என்றார்.